Kamalhaasan Erode East By Election : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்...காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கமல்..!
காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
கைக்கு கை கொடுத்த கமல்:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
இதை தவிர்த்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியே திக்குமுக்காடியுள்ளது.
திருமகன் ஈ.வெ.ரா. மறைவு:
ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4ஆம் தேதி காலமானார். அவரது மறைவால், அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 07ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இறுதிநாளில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அன்று மாலையுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான நேரம் நிறைவடைந்தது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது.
விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார்.
அதை ஏற்ற கமல், மக்கள் நீதி மய்ய கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அறிவித்தார். இந்த சூழ்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கமல் அரசியலில் மாற்றம்?
கட்சி தொடங்கியதில் இருந்தே, இரு பெரும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஊழலை எதிர்த்து அரசியல் களம் கண்ட கமல், திராவிட கட்சிகளையும், பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், சமீககாலமாக, அதில் மாற்றம் தெரிந்தது. அதன் விளைவாகதான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தார்.
விளக்கம் அளித்த கமல்:
இதுகுறித்து விளக்கம் அளித்த கமல், "இந்த முடிவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கானது. 2024 பொதுத்தேர்தலைப் பற்றிச் சொல்ல இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நான் இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று அழைக்கிறேன்.
தேசிய முக்கியத்துவம் என்று வரும்போது கட்சி சித்தாந்தத்தை கடக்க வேண்டும். மக்கள் அதில் முதன்மையானவர்கள். அனைவரையும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள். இந்தியாவின் பன்முகத்தன்மை அதை தனித்துவமாக்குகிறது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது பெரிய காரணத்திற்கு எதிரான போர். இதில் நான் சிறிய வேறுபாடுகளை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் போருக்கு வருவோம். ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டேன் என்று அர்த்தம் இல்லை" என்றார்.