HP Elections 2022:பாஜகவையும் விட்டுவைக்காத உட்கட்சிப் பூசல்: பரபரப்பை கிளப்பும் இமாச்சல் தேர்தல்
உட்கட்சிப்பூசலால் சுயேச்சைகளாக களமிறங்கியுள்ள பாஜக-வின் முன்னாள் எம்எல்ஏ-க்களால் கட்சியின் வாக்குகள் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் தேர்தலுக்கான இறுதிக்கட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், உட்கட்சிப் பூசலால், பாஜக-வின் வாக்கு வங்கியில் பெரும் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிக்கட்ட, பாஜக-வின் உள்ளூர் தலைமையும் டெல்லி தலைமையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலைப்பிரதேசத்தை வெல்லப்போவது யார்?
இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் கச்சேரி களைக் கட்டிவிட்டது. தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச்சாதனை படைக்க பாஜக முழுப் பலத்துடன் களமிறங்கியுள்ளது. ஆட்சிக்கு எதிர்ப்பான அலையைப் பயன்படுத்தி, ஆட்சியை மீண்டும் பிடிக்க, காங்கிரஸும் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளது. 68 சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில், தற்போது பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. ஆட்சியைப் பிடிப்பதில், இம் மாநிலத்தின் இருபெரும் கட்சிகளான பாஜக-விற்கும் காங்கிரஸிற்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட்கள் என பல கட்சிகள் இருந்தாலும், காங்கிரஸ், பாஜக- இடையேதான் பிரதான போட்டி ஏற்பட்டுள்ளது.
உட்கட்சிப்பூசலால் பாஜக-விற்கு கலக்கம்:
தேர்தல் வரும் போதெல்லாம் பெரிய கட்சிகளில் உட்கட்சி பூசல் வருவது சகஜம்தான். அதிலும், ஆளும் கட்சியாக இருந்தால், உட்கட்சிப்பூசல் நிச்சயம் வரும். அப்படியொரு நிலைதான் தற்போது பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. பாஜக-வில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் 4 பேருக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த 4 பேரும் தற்போது, கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கிருபால் பார்மர் தலைமையில் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர். கின்னவூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தேஜ்வந்த் சிங் நேஹி, அன்னி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கிஷோரி லால், இந்தோரா சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஹர் திமான், நலகார்ஹ் சட்டமன்றதொகுதி முன்னாள் உறுப்பினர் கே.எல். தாகூர் ஆகியோர்தான் தற்போது பாஜக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, சுயேச்சைகளாகப் போட்டியிடுகின்றனர். அதே போல், கட்சியின் துணைத்தலைவராக இருந்த கிருபால் பார்மர், சுயேச்சையாக ஃபதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், ஒழுங்கு நடவடிக்கையாக, கட்சியின் துணைத் தலைவர் பார்மர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, பாஜக-வின் இமாச்சலப்பிரதேச தலைவர் சுரேஷ் கஷ்யாப் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். இவர்கள் தனித்துப் போட்டியிடுவதால், பாஜக-வின் வாக்குவங்கியில் சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
சமரசத்தில் தலைவர்கள்:
பாஜக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்பூசலை சமாளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநிலத் தலைவர் சுரேஷ் கஷ்யாப்பும், டெல்லி தலைமையும் எடுத்து வருகின்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்றும், தங்களது ஆட்சியின் திறனுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தொண்டர்களுக்கு பாஜக தலைமை நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் முக்கியத்தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சாரத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு, வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக பாஜக உள்ளூர் தலைவர்களும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று சிலருடைய விலகல், தங்களது கட்சிக்கு எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாஜக முன்னணித் தலைவர்கள் திட்டவட்டமாக நம்புகின்றனர்.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் காங்கிரஸ்:
பாஜகவின் உட்கட்சிப்பூசலும் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலையும் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆனால், ஏற்கெனவே பல்வேறு குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ், பலமான தலைவர் இல்லாமல் இத் தேர்தலைச் சந்திப்பது, அக் கட்சிக்குப் பலவீனமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
வெல்லப்போவது யார்?
வரும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், இறுதிக் கட்டப்பிரச்சாரத்தில் ஆளும் பாஜக, பல முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பம்பரம் போல் விறுவிறுப்பாக வாக்குகளைக் கோரி வருகின்றனர். பாஜக வரலாற்றுச்சாதனைப் படைக்குமா அல்லது வீறு கொண்டு காங்கிரஸ் வெற்றிப் பெறுமா அல்லது எதிர்பாராத திருப்பமா எனப் பல்வேறு கேள்விகளுக்கு, வரும் 12-ம் தேதி இமாச்சல் பிரதேச வாக்காளர்கள் முடிவு எழுத உள்ளனர்.