Lok Sabha Election 2024: சேலத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் முதல் செயல்வீரர்கள் கூட்டம்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசனை, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு அறிமுகம் செய்து வைத்தார்.
சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் சேலம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, "இந்தியா கூட்டணியின் முதல் செயல் வீரர்கள் கூட்டம் சேலத்தில் தான் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் மீண்டும் வீரபாண்டியார் காலத்தை கொண்டு வர வேண்டும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இது முன்னோடி தேர்தல். அடுத்து சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற வேண்டும். சேலத்திலும் ஒரு அமைச்சர் உருவாக வேண்டும். இடைத்தேர்தலில் தான் செல்வகணபதி திமுகவில் இணைந்தார். அதை தொடர்ந்து அனைத்து இடைத்தேர்தலிலும் செல்வகணபதி என்னுடன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். சேலம் தொகுதிக்கு தேவையானதை நாடாளுமன்றத்தில் பெற்று கொண்டு வருவார். மற்ற எம்பிக்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்வார் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் செல்வகணபதி, "அதிமுக என்னை கட்சியை விட்டு வெளியே தூக்கி எறிந்த போது, மாற்றான் தோட்டத்து மல்லிக்கும் மணம் உண்டு என நம்பியவர் கலைஞர். ராமர் 14 ஆண்டுகள் தான் வனவாசத்தில் இருந்தார். நான் 24 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்து வந்தேன். 24 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு மீண்டும் தேர்தலை சந்திக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த அனைத்து இடைத்தேர்தலில் நான் சுற்றி சுற்றி பணியாற்றியதை பார்த்து என் மீது பொய் வழக்கு போட்டார்கள். ஆனால் ஸ்டாலினை நம்பியவர்கள் கைவிட மாட்டார்கள்; அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். கலைஞர் போல ஸ்டாலின் திமுகவை வழி நடத்துகிறார். எனக்கு முகவரி திமுக தான். செல்வகணபதி தனியாக தெருவில் போனால் யாரும் மதிக்க மாட்டார்கள். ஆனால் கருப்பு சிவப்பு துண்டு அனிந்து போனால் தான் மரியாதை. தலைமையின் விசுவாசம்தான் என்னை உயர்த்தி பிடித்துள்ளது. இது போர் காலம், ஓவர் காண்பிடன்ஸ் இருந்தால் வீழ்ந்து விடுவோம். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். சேலத்தின் வேட்பாளர் செல்வகணபதி அல்ல, ஸ்டாலின் தான்" என்று பேசினார்.