Trichy Corporation Election 2022 | பொய் சொல்லுவதற்கு நோபல் பரிசு வழங்கினால் அது ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிச்சாமி
’’தேர்தலில் திமுக தனித்து போட்டியிட திராணி இல்லாமல் தான் கூட்டணி வைத்து எப்போதும் தேர்தல்களை சந்தித்து வருகிறது’’
திருச்சி மன்னார்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திருச்சி மாநகராட்சி மேயராக அதிமுகவை சார்ந்தவர்கள் தான் வர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் திமுகவுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், கொள்ளைப்புற வழியாக வெற்றி பெற முயற்சி செய்கிறது. வேட்பாளர்களை அச்சுறுத்துவது, வழக்கு பதிவு செய்வது, தேர்தல் பணியில் ஈடுபட முடியாமல் முடக்கப் பார்க்கின்றனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி வருகிறார். திமுகவின் மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம் அதிமுகவினர் எந்தக் காலத்திலும் அஞ்சமாட்டார்கள்.
தமிழகத்தில் கடந்த 9 மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் திமுக செய்யவில்லை. எனவே, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின் திணறுகிறார். காவல் துறை தற்போது திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவல் துறை நடுநிலையுடன், ஜனநாயக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றவில்லை.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் திமுக அரசை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், படித்த அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, இன்றும் நடைபெற்று வருகின்றன. ஆனால், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று அவதூறான பிரச்சாரத்தை, பச்சைப் பொய்யை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்கினால், அது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.
திமுக தேர்தலுக்கு முன்னால் கூறிய வாக்குறிதிகளை எதையும் முழுமையாக நிறைவேற்ற வில்லை. மக்களிடம் தொடர்ந்து பொய் கூறியே வருகிறார்கள், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் தான் தேர்தல் பிரச்சாரத்தை காணொலியில் செய்கிறார். மேலும் தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் திமுக ஆட்சி மக்களின் வெறுப்பை சந்தித்துள்ளது என்றார். குறிப்பாக தேர்தலில் திமுக தனித்து போட்டியிட திராணி இல்லாமல் தான் கூட்டணி வைத்து எப்போதும் தேர்தல்களை சந்தித்து வருகிறது. அதிமுக அரசு எப்போதும் மக்கள் உணர்வுகளையும், எண்ணங்களையும் புரிந்து, மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதலிடத்தில் உள்ளது. எனவே, மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையுடன் பணியாற்றி, வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.