Greater Chennai TN Exit Poll Results 2021 | சென்னையை தன் வசமாக்கும் திமுக..
பெருநகரச் சென்னை மண்டலத்தில் திமுகவின் வாக்கு சதவிகிதம் 2016 தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குச்சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் 1.2 சதவிகிதம் குறைந்திருந்தாலும், தொகுதிவாரியாக அதிக இடங்களைக் கைப்பற்றி முன்னிலை பெறும் எனக் கணிக்கப்படுகிறது.
இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளோடு 2021 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிடும் போது அதிமுகவின் ஓட்டுகள் மண்டல வாரியாக சரிந்துள்ளது.அதே நேரத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை மண்டலத்தில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?
2016 சட்டமன்றத் தேர்தல்
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக 98 இடங்களையும், அதிமுக 134 இடங்களையும் மற்றவை இரண்டு இடங்களையும் கைப்பற்றின. சென்னை மண்டலத்தில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளன. இதில், கடந்தமுறை திமுக கூட்டணி 10 இடங்களைக் கைப்பற்றின. இந்த மண்டலத்தில் கடந்தமுறை அவர்களின் வாக்கு சதவிகிதம் 41.8. அதிமுக கூட்டணி 6 இடங்களைப் பிடித்தன. அவர்களின் வாக்கு சதவிகிதம் 45.6. மற்றவை 12.6 சதவிகித வாக்குகளைப் பகிர்ந்திருந்தன.
2021 சட்டமன்றத் தேர்தல்
2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் திமுக 11 முதல் 13 இடங்களைக் கைப்பற்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கணிக்கப்படும் வாக்கு சதவிகிதம் 40.6, அதிமுக 3 முதல் 5 தொகுதிகளைப் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வாக்கு சதவிகிதம் 34.7. அமமுக கூட்டணி ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. ஆனால், அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 3.8. நாம்தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மற்றவை கிட்டத்தட்ட 20.9 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டலத்தில், திமுக கடந்தமுறையுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 2 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை சென்னையின் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்ற அதிமுக, இந்தமுறை அதில் 2 இடங்களில் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
தொகுதிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக திமுக 160இல் 172 இடங்களை கைப்பற்றி இம்முறை ஆட்சி அமைக்கும் எனக் கணிக்கப்படுகிறது. சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை திமுக மற்றும் அதிமுக மட்டுமே மாறிமாறி வெற்றியைத் தக்கவைத்து வந்துள்ளன. ஆனால் இந்தமுறை கமலின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குசதவிகிதம் 20.9 என உயர்ந்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.இதுகிட்டத்தட்ட திமுக பெறும் எனக் கணிக்கப்படும் வாக்கு சதவிகிதத்தில் சரிபாதி. எப்படியிருந்தாலும் திமுக பெருநகர சென்னை மண்டலத்தின் அசைக்கமுடியாத அதிகாரப்பலமாக இந்தமுறையும் உருவெடுக்கும் என கருத்துக்கணிப்பு உறுதிசெய்கிறது.