Erode East By Election: 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்! ஈரோடு கிழக்கில் தி.மு.க. வெற்றி! டெபாசிட் கூட வாங்காத நாம் தமிழர்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அ.தி.மு.க, பா.ஜ.க., போன்ற முன்னணி கட்சிகளுடன் அறிமுக கட்சியான தவெக-வும் இந்த தேர்தலை புறக்கணித்தது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், காலை முதல் தி.மு.க. முன்னிலையில் இருந்தது.
தி.மு.க. அபார வெற்றி:
தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்று ஈரோடு கிழக்குத் தொகுதியின் புதிய எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். அவர் மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்த 439 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பிரதான வேட்பாளராக களமிறங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23 ஆயிரத்து 810 வாக்குகள் மட்டுமே பெற்றார். தி.மு.க. வேட்பாளர் இந்த தேர்தலில் 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வெற்றியை காட்டிலும் இந்த வாக்குகள் வித்தியாசம் அதிகம்.
மொத்தம் 46 வேட்பாளர்கள் களமிறங்கிய இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் தவிர பிற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை அந்த தொகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
பெரியார் மண்ணில் பெரிய வெற்றி:
இந்த வெற்றியை தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியை பெரியார் மண்ணில் பெரிய வெற்றி என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கிய நிலையில், கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் களமிறங்கி வெற்றி பெற்றது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வே நேரடியாக களமிறங்கியது.
இந்த தேர்தலில் தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்று கணிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 64 சதவீத வாக்குகள் இந்த இடைத்தேர்தலில் பதிவாகியது. இதில், தி.மு.க. வேட்பாளர் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் இழந்த நிலையில், முன்னணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், இந்த தேர்தலில் நோட்டா மட்டும் 6 ஆயிரம் வாக்குகளை தன்வசம் பதிவு செய்து கொண்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

