Erode By-Election Result: ஈரோடு கிழக்கின் வெற்றி, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை
இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி கழகத்தின் வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதையொட்டி, இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி கழகத்தின் வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியானது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம். 'இது இடைத்தேர்தல் மட்டுமல்ல, எடைத்தேர்தல்' என்று தேர்தல் பரப்புரையின்போது நான் குறிப்பிட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாண்டுகால ஆட்சியானது, மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருவதற்கு மக்கள் தங்களது நன்றியை வாக்குகளின் மூலமாக உயர்த்திக் காட்டி இருக்கிறார்கள்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 66 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட பலரும் வைப்புத் தொகையை இழந்திருக்கிறார்கள். இது சாதாரண வெற்றியல்ல, மகத்தான வெற்றி!
இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்கு பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தி அ.தி.மு.க. வேட்பாளருக்குப் பரப்புரை செய்தார் பழனிசாமி. வேட்டி இருக்கிறதா - மீசை இருக்கிறதா - ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார். தோல்வி பயத்தில் அவர் பிதற்றி வந்ததையே அது காட்டியது. சொந்தக் கட்சிக்குள் நடக்கும் நாற்காலிச் சண்டைகளைச் சமாளிக்க முடியாமல், அந்த இயலாமையை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் வந்து காட்டிக் கொண்டிருந்தார் பழனிசாமி.
நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி, அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, 'எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என்றார். பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.
கடந்தச் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருந்து செயல்பட்டுள்ளோம் என்பதற்கு மக்கள் இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாகப் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். அம்மக்கள் அனைவர்க்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், மிகச்சிறப்பாகச் செயல்பட்டு உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார்.
இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

