Breaking: தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் அடுத்த தேர்தல் அப்டேட்.. விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு..!
விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விக்ரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரவாண்டியில் இதுவரை வென்றவர்கள் யார் யார்..?
விக்ரவாண்டியில் கடந்த 2011ம் ஆண்டு சிபிஎம், 2016ம் ஆண்டு திமுக, 2019 இடைத்தேர்தலில் அதிமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றிபெற்றது.
எம்.எல்.ஏ புகழேந்திக்கு என்ன ஆனது..?
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந. புகழேந்திக்கு முன்னதாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.