கோவை முழுதும் கொலுசு மழை... தர சோதனையில் வந்த அதிர்ச்சி முடிவு... வெள்ளி மாதிரிக்கு போட்டா போட்டி!
வாங்கும் பொருளின் தரம் கூட அறியாமல், கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் வாக்காளர்கள் போட்டி போட்டு வருவதால் தான், தெரிந்தே ஏமாறும் சூழலுக்கு வாக்காளர்கள் தள்ளப்படுகின்றனர்.
கோவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாளிலிருந்து ஒரே புகார் மழை. முறைகேடு, பாரபட்சம், ரவுடியிசம் என அடுத்தடுத்து எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, மற்றொரு புறம், வாக்காளர்களை கவர பரிசு மழை அங்கு பெய்து வருகிறது. குறிப்பாக திமுக-அதிமுக இரு கட்சிகளும் வாக்காளர்களை நன்கு ‛கவனித்து’ வருகின்றனர்.
திமுக தரப்பில் ஒரு படி மேலே போய், வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஓட்டுக்கு பணத்தோடு, வெள்ளிக் கொலுசு, ஹாட் பாக்ஸ் என பரிசுப் பொருட்கள் கொட்டி வருவதால், கோவை மகிழ்ந்திருக்கிறது. இதற்கிடையில் திமுகவினர் வினியோகித்ததாக கூறப்படும் வெள்ளி கொலுசு, தரமற்றது என நேற்று இறுதிப் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட கொலுசு தரமானதா? லாபமானதா? என்பதை ஆராய, நாளிதழ் ஒன்று முன்வந்தது. அதன் படி வாக்காளர்களுக்கு வினியோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட வெள்ளி கொலுசை, தரம் சோதனையிடும் ஆய்வத்தில் கொடுத்து பரிசோதித்துள்ளது.அதில் கிடைத்த முடிவுகளையும் அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. அந்த முடிவு, வாக்காளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு கொலுசுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில் ஒரு கொலுசின் முடிவு இதோ...
வெள்ளி - 27.10 சதவீதம்
தாமிரம் - 62.15 சதவீதம்
துத்தநாதம்- 10.75 சதவீதம்
மற்றொரு கொலுசை ஆய்வு செய்ததில் அதன் முடிவு...
வெள்ளி - 3.66 சதவீதம்
தாமிரம் - 85.14 சதவீதம்
துத்தநாகம் - 14.20 சதவீதம்
என இருந்தது தெரியவந்தது. இந்த முடிவுகள் மூலம், வினியோகிக்கப்பட்டது வெள்ளி கொலுசுகள் அல்ல... வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகள் என்பது தெரியவந்துள்ளது. சரி, அப்படியானால் உண்மையான வெள்ளி கொலுசு எப்படி இருக்கும்? என கோவை கோல்டு ஸ்மித் கூட்டமைப்பிடம் விளக்கம் கேட்டு அதையும் வெளியிட்டுள்ளனர். அதன் படி...
வெள்ளி - 92.5 சதவீதம்
துத்தநாகம் - 3.75 சதவீதம்
தாமிரம் - 3.75 சதவீதம்
கலந்திருந்தால் மட்டுமே அது தூய வெள்ளி ஆபரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்ட ஆபரணத்திற்கு மட்டுமே, ‛ஹால்மார்க்’ முத்திரை வழங்கப்படும் என்றும் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசுகளை , வெள்ளி கொலுசு என வினியோகம் செய்து வரும் நிலையில், அதன் உண்மை நிலை தற்போது அம்பலமாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க, இன்னும் தங்களுக்கு கொலுசு வரவில்லை என்று, பலர் கட்சி நிர்வாகிகளை முற்றுகையிட்டு வருகின்றனர். நாளை தான் தேர்தல் என்பதால், இன்றுக்குள் உங்கள் கையில் கொலுசு வந்து, காலுக்கு செல்லும் என்று உறுதியளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாங்கும் பொருளின் தரம் கூட அறியாமல், கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் வாக்காளர்கள் போட்டி போட்டு வருவதால் தான், தெரிந்தே ஏமாறும் சூழலுக்கு வாக்காளர்கள் தள்ளப்படுகின்றனர். அவர்கள் அளிக்கும் கொலுசின் எடையின் படி, உண்மையான வெள்ளி கொலுசு கொடுத்தால், 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்குள் தான் வரும் என்றும், அதை ஏமாற்றி, நோட்டாக பணத்தை கொடுத்து வாக்காளர்களை வசீகரிக்கும் பணி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுகவுக்கு இணையாக அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடாவில் இறங்கியிருப்பதால், கோவை... பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்