சேலம் மாவட்டம் எடப்பாடியில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ள அதிமுக...
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் அதிமுக ஆதரவாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக ஆதரவாளர்கள் முன்னிலையில் இருந்தாலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அனைத்து இடங்களிலும் அதிமுக ஆதரவாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை சேலம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ள நிலையில். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் அதிமுக ஆதரவாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். குறிப்பாக , நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் 1,064 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளரை விட 220 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக மீண்டும் ஒரு முறை தனது முழு பலத்தை நிரூபித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் 10 சட்டமன்றத் தொகுதிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற 35 காலியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, ஓமலூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்தார் மணி, தற்போது ஓமலூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதால் பதவியை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் ஓமலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலிலும் திமுக வேட்பாளர் சண்முகம் 13,401 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 4,691 அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் 23 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 35 பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் 09.10.2021 தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் மொத்தம் 1,22,857 பேர் வாக்காளர்கள் இருந்த நிலையில் 97,629 வாக்காளர்கள் வாக்களித்தனர். சேலம் மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடந்து வருகிறது.





















