"கல்லூரிக் கனவு” அடுத்து என்ன படிக்கலாம்...கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவினை உயர்த்துவது தான் முக்கிய நோக்கம்
12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தின் சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.66 , நடப்பாண்டு 2.51 சதவீதம் கூடுதலாக கிடைக்கப்பெற்று 93.17 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு ஆகும்.
கல்லூரிக் கனவு
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம்சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு "கல்லூரிக் கனவு” - உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி
மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற கனவினை நிறைவேற்றிடும் விதமாக நான் முதல்வன் திட்டத்தின்கீழ், கல்லூரிக்கனவு -உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மாவட்டந்தோறும் நடத்திட உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு "கல்லூரிக் கனவு” - உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. "கல்லூரிக் கனவு” - உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிக்கான முக்கிய நோக்கம் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவினை நிறைவேற்றுவதாகும்.
அந்த வகையில், இத்திட்டத்தின் மூலம், 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திறன் பயிற்சிகள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் உயர்கல்வி குறித்து விரிவாக வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
இதுமட்டுமல்லாமல், மாணவர்களின் தங்கள் திறமைக்கேற்ற எந்தத் துறையினை தேர்ந்தெடுத்தல் வெற்றி பெறலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், திறன் பயிற்சிகள், அரசால் வழங்கப்படும் உதவித்தொகைகள், உயர்கல்வியில் உள்ள இடஒதுக்கீடுகள், அரசால் வழங்கப்படும் கல்வி கடனுதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.மேலும், கல்லூரிக்கனவு வழிகாட்டுதல் கையே தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விழுக்காடு
12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தின் சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதம் 90.66 சதவீதம், நடப்பாண்டு 2.51 சதவீதம் கூடுதலாக கிடைக்கப்பெற்று 93.17 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாணவர்களின் தங்களுடைய உழைப்பு ஒன்றே காரணமாகும். அதற்கான வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றைய தினம் வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு நல்ல தேர்ச்சி சதவீதம் கிடைக்கப்பெற்றதுடன் மாநில அளவில் தர வரிசையில் முன்னேற்றமும் பெற்றுள்ளது மனமகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
12 மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடின உழைப்பும் மிக முக்கிய காரணமாக கருதப்படுவதால் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதம் 45 முதல் 48 சதவீதமாக இருந்து வந்துள்ளது. மேலும், அதிகப்படியான மாணவர்கள் 12-ஆம் வகுப்போடு தங்களுடைய படிப்பினை முடித்துக்கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், மாணவியர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு மிகவும் குறைந்தே காணப்பெற்றது. தற்பொழுது, தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்புத்திட்டங்களான நான்முதல்வன், கல்லூரிக்கனவு, புதுமைப்பெண் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலமாக உயர்கல்வி பயிலும் வகையில் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதம் உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீதம் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாகும். எனவே, கல்லூரிக்கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் மூலம், தங்களுக்கு கிடைத்த தகவல்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தங்களுக்கு அருகாமையில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வினை தெரிவித்திட வேண்டும். அவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும்.
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் கட்டாயம் உயர்கல்வி பயில வேண்டும். கடந்தாண்டு செயல்படுத்திய புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவியர்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசின் சார்பில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியர் உயர்கல்வியில் பயில 7.5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுவதால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சதவீதமும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் அரசுப்பள்ளியில் பயின்றமாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவுள்ளது.
மேலும், உயர்கல்வி பயின்று முடித்த மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் போட்டித்தேர்விற்கான ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு உயர்கல்வி பயின்று தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.