CBSE 12th result 2022: சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்: முதலிடத்தில் கேரளா.. சென்னைக்கு எந்த இடம்?
மண்டல வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரை, கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம் 98.83 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
![CBSE 12th result 2022: சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்: முதலிடத்தில் கேரளா.. சென்னைக்கு எந்த இடம்? Trivandrum region tops in CBSE Plus 2 results 2022; Which place for Chennai? CBSE 12th result 2022: சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவுகள்: முதலிடத்தில் கேரளா.. சென்னைக்கு எந்த இடம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/19/1e7708c71466a2f40360b568f109b6cf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. இதனால் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெற்றன. இதை எழுத 14,44,341 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 14,35,366 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில், 1,33,0662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தில் திருவனந்தபுர மண்டலம்
மண்டல வாரியான தேர்ச்சியைப் பொறுத்தவரை, கேரளாவின் திருவனந்தபுர மண்டலம் 98.83 சதவீதத் தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரயாக்ராஜ் (அலகாபாத்) மண்டலம் கடைசி இடத்தில் உள்ளது. இந்த மண்டல மாணவர்கள், 83.71 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர்.
இரண்டு பருவத் தேர்வுகள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பொதுத்தேர்வு நடைபெற முடியாமல் போவதைத் தவிர்க்கும் வகையில், 2021-22ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில், கொள்குறி வகை வினாக்களும் இரண்டாம் பருவத் தேர்வில் பகுப்பாய்வு வகை அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றன.
இந்த நிலையில் முதல் பருவம், இரண்டாம் பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படவுள்ளது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள், திட்டப்பணிகள், நடைமுறைத் தேர்வுகள், பொது தேர்வுக்கு முந்தைய தேர்வு உள்ளிட்ட விவரங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறவுள்ளது.
உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கிய நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)