MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats Increased: வெளியான சூப்பர் அறிவிப்பு; மருத்துவ மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! எம்பிபிஎஸ், பிடிஎஸ் கல்லூரி இடங்கள் அதிகரிப்பு- யாருக்கெல்லாம் பொருந்தும்?

மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரிகளில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 1994-1995 கல்வியாண்டில், தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்காக விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் முதற்கட்டமாக 3 இடங்கள் வழங்கப்பட்டன. இதன் முக்கிய நோக்கம், திறமையான விளையாட்டு வீரர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து பயிலும் வகையில் அவர்களை ஊக்குவிப்பதாகும்.
2018-ல் உயர்த்தப்பட்ட இடங்கள்
பின்னர் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, 01.06.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணை நிலை எண்.376, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை (MCA-1) ஆணையின்படி, விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3 இலிருந்து 8 ஆக உயர்த்தப்பட்டது. அதில் MBBS பாடப்பிரிவிற்கு 7 இடங்களும், BDS பாடப்பிரிவிற்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டு, 2018-2019 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு விளையாட்டு வீரர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, மாநிலத்தின் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் அதிகரிக்க ஒப்புதல்
இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற 47வது செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை உடனடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், இதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது அரசாணை நிலை எண்.92. மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் (MCA-1) துறை, நாள்.10.03.2026 -ன் படி தமிழ்நாடு அரசு. அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கான இடங்கள் 7-லிருந்து 13 ஆகவும் BDS படிப்புக்கான இடங்கள் 1-லிருந்து 2-ஆகவும் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இடங்களை அதிகரித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
























