TNPSC Group 4: கடைசி வாய்ப்பு! குரூப் 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தவறினீர்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 exam 2025: தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 14.11.2025 முதல் 23.11.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சில குரூப் 4 தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், அந்த தேர்வர்களுக்கு கடைசி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இவர்களுக்கு, நவம்பர் 23ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி கூறும்போது, ’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 07/2025, நாள்: 25.04.2025-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, கடந்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
குறிப்பாக தேர்விற்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்ப்பு
தொடர்ந்து கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட (வனக்காப்பாளர். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் பழங்குடி இளைஞர் பதவிகள் நீங்கலாக) தேர்வர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் அக்டோபர் 29 அன்று வெளியிடப்பட்டது.
குறைபாடாக பதிவேற்றம்
இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், கணிணி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 14.11.2025 முதல் 23.11.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக மீள பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் தங்களது குறிப்பாணையில் (Memorandum) தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தங்களது ஒருமுறைப் பதிவு தளம் (OTR) வாயிலாக மீள பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமை கோரல் (claim) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும்’’ எனவும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/






















