TNPSC Group 2A Result: குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 2A Non Interview Posts Result: குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
![TNPSC Group 2A Result: குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு TNPSC Group 2A Non Interview Posts Combined Civil Services Examination result in March last week 2024 TNPSC Group 2A Result: குரூப் 2 நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/f163836fbcf5d76d103909f68b1487681706162198662332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின.
தொடர் தாமதம்
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், 55,071 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சுமார் 11 மாதங்கள் கழித்து, குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகின. இதில் நேர்முகத் தேர்வு உடைய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் மட்டும் வெளியாகி இருந்தன. நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டனர்.
இருவழித் தொடர்பு முறையில் வெளியீடு
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டது.
மேலும், நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பின்னர் தேர்வர்கள் முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் நேர்முக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு முன்னர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும்
எனினும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்கள் கோரி வந்தனர். இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளின் தேர்வு முடிவுகள், அதாவது மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தத் தகவலை டிஎன்பிஎஸ்சி கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)