Teachers Protest: வீட்டுச் சிறையில் ஆசிரியர்கள்? மறைத்து வைத்து தமிழ்நாடு அரசு துன்புறுத்தலா?- கொந்தளித்த ஈபிஎஸ்
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும் - ஈபிஎஸ்.

அற வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து 18ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. எழும்பூர் மற்றும் டிபிஐ பகுதிகளைச் சுற்றிலும் ஆங்காங்கே ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் (ஜனவரி 10) காலை 8 மணிக்கு முன்கூட்டியே கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் ஏழு பேர் 35 மணி நேரத்தை கடந்தும் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை. அத்தோடு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் வாசலில் வைத்து அவர்களைக் கைது செய்து போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில் இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வீட்டுச் சிறையிலா?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சம வேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், தலைவர் ரெக்ஸ் ஆனந்த குமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து ஸ்டாலின் அரசு #HouseArrest செய்துள்ளது. அவர்களை வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
சிறு தீங்கு நேர்ந்தாலும் முழு பொறுப்பு
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ஸ்டாலின் ஏற்க வேண்டும்.
அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்’’ என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.






















