சீப்பை ஒளிச்சா கல்யாணம் நின்னுடுமா? சம ஊதியம் கோரி போராடி, கைதான ஆசிரியர்கள் எங்கே?
ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி- அண்ணாமலை

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடியதால், கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 16 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே நேற்று (ஜனவரி 10) காலை 8 மணிக்கு முன்கூட்டியே கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் ஏழு பேர் 35 மணி நேரத்தை கடந்தும் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை. அத்தோடு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் ஹோட்டல் வாசலில் வைத்து அவர்களைக் கைது செய்து போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
யாரெல்லாம் கைது?
மாநில பொது செயலாளர் ராபர்ட்
மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்த குமார்
மாநில பொருளாளர் கண்ணன்
மாநில துணைப் பொதுச் செயலாளர் வேல்முருகன்
மாநில துணைத் தலைவர் ஞானசேகரன்
தேனி மாவட்ட பொருளாளர் மாசாணன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றிய பொறுப்பாளர் ரெங்கசாமி
அண்ணாமலை கண்டனம்
இந்த நிலையில் இதற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத போக்குக்கு எடுத்துக்காட்டு.
ஆட்சிக்கு வருவதற்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என திமுக கொடுத்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார்.
நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு
வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் குரலை அடக்கலாம் என்று நினைப்பது வெட்கக்கேடு. ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி.
உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.






















