தமிழ்ப் புதல்வன் திட்டம் - மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்டமாக 2837 மாணவர்களுக்கு தலா ஆயிரம்
மயிலாடுதுறையில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமான “தமிழ்ப் புதல்வன்” திட்டதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஏ.வி.சி.பொறியியல் கல்லூரியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாதம் 1000 வழங்கும் திட்டமான “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் 2837 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM CARD) மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் பேச்சு
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இன்றைய தினம் தமிழக முதல்வர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமான “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றைய தினம் “தமிழ்ப் புதல்வன்” திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழிகாட்டு கையேடு
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு கையேட்டில் உலக நாடுகளில் ஆராய்ச்சிகள் என்ன இருக்கின்றன, இந்தியாவில் இருக்கக்கூடிய உயர்கல்வி வாய்ப்புகள், கல்லூரி மாணவர்களுக்கான அரசு உதவித்திட்டங்கள், வளர்ச்சிக்கான படிப்பை எப்படி படிக்கலாம், உயர்கல்விக்கான வங்கிக்கடன், நீங்கள் நன்றாக படித்தால் அரசு வேலையில், ஆட்சியராக, வங்கி அதிகாரியாக, முப்படை துறைகளில், தமிழ்நாடு அரசு பணியில், புது தொழில் தொடங்கலாம், எந்த துறையாக இருந்தாலும் அதில் சாதிக்கலாம். அனைவருக்குமே வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மாணவர்கள் நினைத்தால் வலிமையானவராக, சாதனையாளர்களாக மாறலாம் போன்றவைகள் உள்ளது.
தேடி தேடி வாய்ப்புகளை தரும் தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுக்கு அரிய திட்டத்தை தந்துள்ளார்கள். தமிழ்நாடு அரசு உங்களுக்கு தேடி தேடி வாய்ப்புகளை தருகின்றனர். அதை நீங்கள் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கவும் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் மாணவர்களின் உயர்கல்வியினை உறுதி செய்யும் விதமாக தமிழ்புதல்வன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே மாணவர்களின் கல்வி தடைபடாமல் அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி உயர்த்திடவும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களின் நிதி நிலையை உயர்த்துதல், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல். தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் அங்கில வழியிலும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழி கல்வியிலும் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கவும் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் மாணவர்களின் உயர்கல்வியினை உறுதி செய்யும் விதமாக தமிழ்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
திட்டத்திற்கான விதிமுறைகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளி, அரசு உதவிப் பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரிடம் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி வருமான உச்சவரம்பு உட்பட எந்த வித பாகுபாடும் இல்லை. வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெறும் மாணவரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 21 கல்லூரிகளை சேர்ந்த 2837 மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெற்று பயன்பெறுகிறார்கள். “தமிழ்ப்புதல்வன்" எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்துகையில் மாணவர்கள் கல்லூரியில் அதிக அளவில் சேர்க்கைக்கு வரும் நிலை உள்ளதுடன் அவர்களது உயர்கல்வி தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வழிவகுப்பதாக அமையும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சராலா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.