Syllabus Reduce: அட்றா சக்க.. இனி எக்ஸாம் எல்லாமே ஈஸிதான்! பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு!
Syllabus Reduce: மாநிலக் கல்வி பாடத்திட்டத்திலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ்ப் பாடம் அடுத்த கல்வியாண்டில் இருந்து குறைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மாநிலப் பாடத்திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். முன்னதாக 2004ஆம் ஆண்டு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டு, இரு கட்டமாக 2018 மற்றும் 19ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்டது.
எனினும் இந்தப் பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகம் சிரமப்படுவதாகக் கூறப்பட்டது. 10, 11, 12-ம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடப்புத்தகங்கள் அதிகபட்சம் 600 பக்கங்களுக்கு மேல் இருப்பதால், தேர்வுக்குத் தயாராவதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்பட்டது. தமிழ் பாடமும் பள்ளி பாடத்திட்டத்தின் தரத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
பாடத்தின் அளவு குறைப்பு
இதற்கிடையே தமிழ் பாடத்துக்கு மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பாடத்தின் அளவைக் குறைத்து தேர்வுக்குப் பயன்படுத்துகிறது. தமிழக பள்ளிக் கல்வித்துறையும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கோரிக்கைக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், மாநிலக் கல்வி பாடத்திட்டத்திலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
40 சதவீத அளவுக்கு தமிழ் பாடத்திட்டம் குறைப்பு
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் வெளியான தகவலின்படி, ’’1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் பாடத்திட்டம் அதிகபட்சம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ் பாடப் புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 6, 7, 8ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் உள்ள 9 பாடங்கள் 8 ஆகவும், 9, 10ஆம் வகுப்பில் 9 பாடங்கள் 7 ஆகவும், 11, 12ஆம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 பாடங்கள் 6 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புதிய தமிழ்ப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்’’ என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

