11th Exam Grace Mark: மாணவர்கள் காட்டில் மழை... பொதுத்தேர்வில் 2 கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவு- எதற்கு?
Tamil Nadu 11th Exam 2025 Grace Mark: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24ஆவது கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடத்தப்பட்ட 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24ஆவது கேள்விக்கு 2 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 24ஆம் கல்வி தவறாகக் கேட்கப்பட்டதால், அந்தக் கேள்விக்கு பதில் எழுதி இருந்தாலே மதிப்பெண்கள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் அண்மையில் நடந்து முடிந்தன. தற்போது விடைத் தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 10, 11ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த திருத்துதல் பணி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளில் சுமார் 95 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கணினி அறிவியல் பாடத்தில் தவறான கேள்வி
இதில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24ஆவது கேள்வி தவறாகக் கேட்கப்பட்டதால், அந்தக் கேள்விக்கு பதில் எழுதி இருந்தாலே 2 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. குறிப்பாக ஒரு மதிப்பெண் வினாவில் 4ஆம் கேள்வியில் 2 வாக்கியங்களும் முரணாக இருந்த காரணத்தால், 4ஆவது கேள்விக்கு பதில் கொடுத்து இருந்தாலே கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள் எப்போது?
ஏற்கெனவே திட்டமிட்டபடி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. தொடர்ந்து 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாக உள்ளன.






















