Special TET: ஜன.24, 25 தேதிகளில் சிறப்பு டெட் தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் வாரியம்!
ஜனவரி 2026-ல் சிறப்புத் தகுதித் தேர்வு உத்தேசமாக 24.01.2026 தாள்-I மற்றும் 25.01.2026 தாள்-II நடத்துவதற்கும், இதற்கான அறிவிக்கையை நவம்பர் கடைசி வாரத்தில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி-2026, ஜூலை-2026 மற்றும் டிசம்பர்-2026 மாதங்களில் நடத்த ஆணை இடப்பட்டுள்ளது.
ஆர்டிஇ எனப்படும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தனித்தனியாக டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்குப் பின்னர் டெட் தேர்வு இங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம்
எனினும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வை எழுதாமலேயே பணியில் தொடர்ந்தனர். இந்த நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம், அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தமிழ்நாட்டில் 2011-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சுமார் 1.70 லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசு முக்கிய முடிவு
இதுகுறித்து அண்மையில் தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2 அல்லது 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு நடக்கும் மாதங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறி உள்ளதாவது:
’’உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) எண். 1385/ 2025-ல் 01.09.2025 அன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாணை அடிப்படையில் தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 231, பள்ளிக் கல்வித் துறை, நாள் 13.10.2025-ல் தற்போது தமிழ்நாடு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன், 2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி-2026, ஜூலை-2026 மற்றும் டிசம்பர்-2026 மாதங்களில் நடத்த ஆகிய ஆணையிடப்பட்டுள்ளது.
சிறப்பு தகுதித் தேர்வு எப்போது?
இந்த ஆணைக்கிணங்க, ஜனவரி 2026ஆம் மாதத்தில் சிறப்புத் தகுதித் தேர்வு உத்தேசமாக 24.01.2026 தாள்-I மற்றும் 25.01.2026 தாள்-II நடத்துவதற்கும், இதற்கான அறிவிக்கையை நவம்பர்-2025 மாத கடைசி வாரத்தில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை-2026 மற்றும் டிசம்பர்-2026 ஆகிய மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.






















