Periyar University Convocation: பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழா; கருப்பு ஆடை அணிந்து வரத் தடையில்லை என அறிவிப்பு
நாளை நடைபெற உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு ஆடை அணிந்து வரத் தடையில்லை என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாளை நடைபெற உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு ஆடை அணிந்து வரத் தடையில்லை என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (28-ஆம் தேதி) 21-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு முது முனைவர் பட்டம் பெறும் நான்கு பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 505 மாணவர்களுக்கும், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 99 பேருக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழை விழா மேடையில் வழங்க உள்ளார். அத்துடன் விழா தலைமையுரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். பட்டமளிப்பு விழா நடைபெறுவதன் வாயிலாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 53,625 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,076 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 6,415 மாணவர்களும் பட்டங்களைப் பெற உள்ளனர்.
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு
இதற்கிடையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் கருப்பு சட்டை போராட்டம் மற்றும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் இல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசி எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்கிறோம் என பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் தெரிவித்திருந்தார். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை அணிய தடை விதித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரும்பப் பெறப்பட்ட சுற்றறிக்கை
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு ஆடை அணிந்து வரத் தடையில்லை என பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏற்பாடுகள் மும்முரம்
பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் கே.தங்கவேல், தேர்வாணையர் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.