Ramadoss: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை வழங்குவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.
இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடை இன்னும் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இவற்றை வழங்குவதில் தாமதம் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 60% அளவுக்கு மட்டுமே பாட நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பேடுகள் (நோட்டுப் புத்தகம்), சீருடைகள் ஆகியவை யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது!
திட்டமிடலில் ஏற்பட்ட தவறுதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்று தெரிகிறது. பாட நூல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அச்சிடப்பட்டதால்தான் 40% மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. சீருடைகள் தயாரிப்பதற்கான ஆணை மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டிருக்கிறது!
மாணவர்களுக்கு 3 கோடி குறிப்பேடுகள் அச்சிட ஆணை வழங்கப்பட்டு, அவற்றில் 75% அச்சிடப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டும், அவை இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. பாடநூல்களும், குறிப்பேடுகளும் இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது!
கற்றலின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதில் கூட, பள்ளிக் கல்வித்துறை அலட்சியம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்களும், குறிப்பேடுகளும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்