TRB Update | முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தேதி: டிஆர்பி அறிவிப்பு
இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜனவரி 29-ம் தேதி முதல் தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி- அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. வயது வரம்பு கட்டுப்பாடு கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்.9-ம் தேதி வெளியிட்ட, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்புக்கு இது பொருந்தும்.
2022-ம் ஆண்டு வரை
இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 29 முதல் தேர்வுகள் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும்போது, ’’முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 ஆகியவற்றுக்கான 2020- 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண். 01/2021, நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண். 01 A / 2021, நாள் 17.09.2021 மற்றும் 01 B /2021, நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.
இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் கணினி வழித் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
தற்பொழுது, 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார் நிலை மற்றும் நிர்வாக வசதியினைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது. விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.