பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
2026 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தனித்துவமான நிகழ்வில், பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ (PPC 2026) நிகழ்ச்சியின் ஒன்பதாவது பதிப்பிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, இதுவரை இல்லாத அளவுக்கு 36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, 36,25,728 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
திட்டத்தின் நோக்கம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பிரதமர் மோடி இந்த முயற்சியை 2018ஆம் ஆண்டு தொடங்கினார். டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் இதன் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வு, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த முறை விண்ணப்பப் பதிவு முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப விவரங்கள்
இதுவரை பதிவு செய்துள்ளவர்களில் 33,24,619 மாணவர்கள், 2,64,288 ஆசிரியர்கள் மற்றும் 36,821 பெற்றோர்கள் அடங்குவர். 2026 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தனித்துவமான நிகழ்வில், பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து 9ஆம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் 'பங்கேற்புச் சான்றிதழ்' வழங்கப்படும்.
பதிவு செய்யும் முறை
விருப்பமுள்ளவர்கள் MyGov இணையதளத்தின் (https://innovateindia1.mygov.in/) அதிகாரப்பூர்வப் பக்கத்திற்குச் சென்று தங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம். மாணவர்கள் தாங்களாகவோ அல்லது தங்கள் ஆசிரியர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜனவரி 11, 2026 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை
பங்கேற்பாளர்கள் பலமுறை தெரிவு வினாக்கள் (MCQ) போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் தளம் வழியாக மாணவர்கள் தங்கள் கேள்விகளையும் சமர்ப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கேள்விகளுக்குப் பிரதமர் மோடி நிகழ்ச்சியின்போது பதிலளிப்பார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://innovateindia1.mygov.in/






















