NCF Draft : 2-ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை: மத்திய அரசின் பாடத்திட்ட வரைவு வெளியீடு
தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு இல்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமாகக் கற்கின்றனர். அவர்கள் கற்றதை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் மதிப்பீடு குழந்தைகள் மத்தியிலும் அவர்களின் கற்றலிலும் பன்முகத் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் குழந்தைகளின் தனித் திறனை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த மதிப்பீடுகள் அனைத்தும் குழந்தைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். அவை குழந்தைகளுக்கு சுமையாக மாறிவிடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளைகளுக்குத் தொடக்க நிலை தேசிய பாடத்திட்ட வடிவமைப்பை(NCF for foundational stage - NCF FS) மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்விக்கான அடுத்த தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு கடந்த ஆண்டுகளில் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் 4 முறை திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 5ஆவது முறையாக தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மாற்றபட உள்ளது குறிப்பிடத்தக்கது.