NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித் தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!
2024-2025-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்), 22.02.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள்;-
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளம் வழியாக 09.01.2025 முதல் 25.01.2025 வரை பதிவேற்றம் செய்யலாம்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் எமிஸ் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான யூசர் ஐடி, PASSWORD- ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். முதன் முறையாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் புதிய பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவுசெய்த பின் புதிய USER ID, PASSWORD — ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் .
DGE Portal-ல் பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:
NMMS தோ்வுக்கு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் (மாணவரின் பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு இடம் பெற வேண்டுமோ அதன்படி) 4/5 இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் பின்னா் DGE Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் பெயர், தந்தை / பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், பாலினம், கைபேசி எண் போன்ற விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல் (ஓடிபி) விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும் ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று உறுதி செய்த பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயா், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.
வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.
பெற்றோரின் தொலைபேசி/கைப்பேசி என்ற கலத்திலும் பெற்றோர் அலலது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிவிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் கட்டணம்
தேர்விற்கான ஆன்லைன் கட்டணம் ரூ.50/- வீதம் DGE Portal- -ல் ஆன்லைனில் அனைத்து விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்த பிறகு ஆன்லைன் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.01.2025 மாலை 06.00 மணி.
பதிவேற்றம் முடிந்தவுடன் விண்ணப்பித்த தோவர்களின் விவரப் பட்டியலினை (Summary Report) (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம் ஆன்லைன் கட்டணம் செலுத்தியபின்) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநார அலுவலர்களிடம் 27.01.2025-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.