CBSE : பள்ளி பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்; யாருக்கெல்லாம்? சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு
இந்த வகுப்புகள் அனைத்துக்கும் கடந்த கல்வி ஆண்டில் (2023- 24) பின்பற்றிய புத்தகங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு 3 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பாடத்திட்டம் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் மாற்றப்பட்டுள்ளதாக அக்கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்?
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஎஸ்இ, தவறான தகவல்களைக் களையவும் தெளிவான புரிதலுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி, 3 மற்றும் 6-ஆம் வகுப்புகள் தவிர்த்து, பிற அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டத்திலோ, பாடப் புத்தகங்களிலோ எந்த மாற்றமும் இல்லை.
இந்த வகுப்புகள் அனைத்துக்கும் கடந்த கல்வி ஆண்டில் (2023- 24) பின்பற்றிய புத்தகங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முன்னதாக மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், ’’பாடத்திட்டத்தின் ஆரம்பப் பக்கங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பாடத்திட்ட வழிகாட்டுதல்களை பள்ளிகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வது கட்டாயமாகும். பாடங்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும், பன்மொழி, கலை ஒருங்கிணைந்த கல்வி, அனுபவக் கற்றல் மற்றும் கற்பித்தல் திட்டங்கள் போன்ற வழிமுறைகளை சாத்தியமான இடங்களில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஏற்கெனவே என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், 3 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றி அமைக்க முடிவு செய்திருந்தது.
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தால், மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல் தடுக்க 6ஆம் வகுப்புக்கு பிரிட்ஜ் கோர்ஸ் உருவாக்கப்பட்டது.
பாடப் புத்தகங்கள் வழங்குவதில் தாமதமா?
இதற்கிடையே 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஆசிரியர்கள் பதற்றம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. 2 மாதங்களுக்கு மேல் தாமதம் ஆகும் என்றும் கூறப்பட்டது.
எனினும் அந்தத் தகவல் தவறு எனவும் 6ஆம் வகுப்புப் புதிய பாடப் புத்தகங்கள் ஜூலை மாதத்திலேயே கிடைக்கும் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கு 9, 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டது. இந்த பாடத்திட்டம் 9, 10ஆம் வகுப்புகளுக்கு எனவும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு எனவும் தனியாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.
இதில் 10ஆம் வகுப்புக்கு 5 கட்டாயப் பாடங்களும் 2 விருப்பப் பாடங்களும் கொடுக்கப்பட்டன. அதேபோல 12-ஆம் வகுப்புக்கு 7 பாடங்கள் முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடங்கள், மானுடவியல், கணிதம், அறிவியல், திறன் பாடங்கள், பொது ஆய்வுகள் மற்றும் உடல்நலம், உடற்கல்வி ஆகிய பாடங்களை பிளஸ் 2 பாடத்திட்டம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.