New Education Policy: அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர் நலனே முக்கியம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர்களின் நலனே முக்கியம்.
![New Education Policy: அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர் நலனே முக்கியம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில் New Education Policy Union Minister Dharmendra Pradhan Urge TN Govt to Implement NEP New Education Policy: அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர் நலனே முக்கியம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/2e9fc8ad8e335f985589dee62358a01d1725877381248332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசியல் ஆதாயத்தைவிட தமிழக மாணவர்களின் நலனே முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக, முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
மத்திய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கும் முரண் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
குறிப்பாக மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 8ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி ஆகிய அம்சங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. மத்திய கல்விக் கொள்கையை எதிர்த்து, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது.
நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 14 பேர் இணைந்து, கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை மாநில அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், மத்திய கல்விக் கொள்கையை ஆதரித்து, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே சமக்ர சிக்ஷான் நிதியை அளிக்க முடியும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, சில நிபந்தனைகளை முன்வைத்தது. எனினும் இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்காததால், சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படவில்லை.
அதாவது 2024- 25ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக்கான நிதியாக ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 60 சதவீதத் தொகை ரூ.2,152 கோடி 4 தவணைகளில் ஒதுக்கீடு செய்யப்படும். முதல் தவணையாக ரூ.573 கோடி நிதி, ஜூன் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையிலும், நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுகுறித்துத் தமிழக அரசு பல்வேறு நினைவுறுத்தல் கடிதங்களை அளித்தும், மத்திய அரசு இதுவரை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில், ’’சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு, கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்துக்காக நிதியை மறுப்பது சரியா? இதுதான் சமத்துவமா’’ என்று முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’’ஆரோக்கியமான போட்டி என்றுமே நல்லதுதான்.
தேசிய கல்விக் கொள்கை மீதான உங்கள் "கொள்கை ரீதியான" எதிர்ப்பில் நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்:
- தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?
- தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?
- தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
- தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, சமமான, எதிர்கால மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
இல்லாவிட்டால், உங்கள் அரசியல் ஆதாயங்களை விட தமிழக மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)