NEET UG Two Tier Exam: இனி 2 கட்டங்களாக நீட்? தேர்வை நடத்தும் அமைப்பிலும் மாற்றம்? மத்திய அரசு ஆலோசனை
நீட் தேர்வை 2 கட்டமாக நடத்துவதைப் போல முதல் நிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

நீட் தேர்வில் ஏற்படும் முறைகேடுகள், மோசடிகளைத் தடுக்கும் வகையில், இனிமேல் 2 கட்டங்களாக நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 20) வெளியிடப்பட்டன.
எங்கெல்லாம் அதிக மதிப்பெண்கள்?
இதில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, சிகார், ஹரியானா மாநிலம் ரோட்டக், குஜராத் மாநிலம் ராஜ்கோட், கேரள மாநிலம் கோட்டயம் ஆகிய நகரங்களில் மையங்களில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த குஜராத் மாணவி, நீட் நுழைவுத் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற விவரம் வெளியாகி, கேட்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் முறைகேடுகளைத் தவிர்க்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2 கட்டத் தேர்வுகள்
பொறியியல் படிக்க ஐஐடி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வு போன்று நீட் தேர்வையும் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை விட 4 அல்லது 5 மடங்கு மாணவர்களை முதல்நிலைத் தேர்வில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேர்வு நடத்தும் அமைப்பும் மாற்றம்?
தேர்வை 2 கட்டமாக நடத்துவதைப் போல முதல் நிலைத் தேர்வை ஓர் அமைப்பின் மூலமாகவும், முதன்மைத் தேர்வை இன்னொரு அமைப்பின் மூலமாகவும் நடத்துவது குறித்தும் அரசு ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக முதல்நிலைத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை மூலமாகவும் (NTA) முதன்மைத் தேர்வை தேசியத் தேர்வுகள் வாரியம் (NBE) / சிபிஎஸ்இ (CBSE) / எய்ம்ஸ் (AIIMS) ஆகியவற்றில் ஏதெனும் ஒரு அமைப்பின் மூலம் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு முறைகேடுகள் அதிகரித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் 2 அடுக்குத் தேர்வு முறை குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

