NEET Coaching: இருவேளை உணவுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி; நாளை தொடக்கம்!
நீட் தேர்வுக்கு எழுத விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாளை (மார்ச் 25) முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வுக்கு எழுத விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாளை (மார்ச் 25) முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 40 நாட்களுக்கு முன்னதாக இந்தப் பயிற்சி தொடங்குகிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர் நாளை (25.03.2024) முதல் கல்வி மாவட்ட அளவில் தேர்வு சார்ந்த பயிற்சிகள், தேர்வுகள் நடைபெற உள்ளன. பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில (Bilingual) வழியில் பயிற்சிகள்/ தேர்வுகள் நடைபெற உள்ளன.
எவ்வாறு பயிற்சி?
வாரத்தில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை 6 நாட்கள் காலை 9.15 முதல் மாலை 4.30 வரை நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும். நீட் தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் 13,197 பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்கள் பயிற்சி பெற உள்ளனர்.
காலை, மதிய உணவுடன் போக்குவரத்துக் கட்டணம்
பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும்.
வாராந்திரத் தேர்வு
ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும் அதைத் தொடர்ந்து 11.00 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திரத் தேர்வுகளும் நடைபெறும். மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் Motivation அமர்வுகளும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சுருக்கமாக நீட் தேர்வு) என அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.