NAT 2022: தேசிய நல்லாசிரியர் விருது: ஆசிரியர்கள் ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..
ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்கள் ஜூன் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் (அறிவியல் மாளிகை) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் சார்பில் காணொலிக் காட்சி மூலம் விருதுகள் வழங்கப்பட்டன.
கொரோனா அச்சம் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கல்வியின் தரத்தை உயர்த்தும், மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆசிரியர்களின் தன்னிகரற்ற சேவையை பாராட்டும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருது #NAT2022 வழங்கப்படுகிறது. இந்த விருதை மத்திய அரசு வழங்குகிறது. ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற ஜூன் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 20 ஆகும்.
கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
* மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,
* கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளீகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா, ஏகலைவ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
* சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள்,
* சிஐஎஸ்சிஇ பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: அரசு மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் சேர்க்கை: புது நடைமுறை அறிமுகம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்