அரசு மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் சேர்க்கை: புது நடைமுறை அறிமுகம்
மாவட்டங்கள்தோறும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்புகளில் முற்றிலும் மெரிட் எனப்படும் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த சூழலில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.
மே 14-ல் இருந்து கோடை விடுமுறை
இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
இந்த நிலையில், மாவட்டங்கள்தோறும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்புகளில் முற்றிலும் மெரிட் எனப்படும் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை நன்கு படிக்கும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனி கவனம் செலுத்தி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் அவர்களின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் அடிப்படையில் Model Schools எனப்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ’’9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களுடன், என்எம்எம்எஸ் எனப்படும் மத்திய அரசின் தேசிய வருவாய்வழித் திறன் தேர்வு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
11-ம் வகுப்பு சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணுடன், தேசிய திறனாய்வு தேர்வு எனக்கூறப்படும் என்டிஎஸ்இ (NTSE) தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் தோறும் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகள், மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன. அங்கு மட்டும் மெரிட் எனப்படும் தகுதி அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்