(Source: Poll of Polls)
சர்ச்சைகளைக் கிளப்பிய மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு திட்டம்: அதென்ன TEALS? எதற்கு?
அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் வண்ணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் TEALS திட்டம் வடிவமைக்கப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திட்டமான TEALS, தேசியக் கல்விக் கொள்கையின் அம்சம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், TEALS திட்டம் எதற்காக அறிமுகம் செய்யப்பட்டது என்று பார்க்கலாம்.
தொழில்நுட்பக் கல்விக்கும் கற்றலுக்கும் துணை நிற்கவும், உயர்நிலை வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் இணைய பயன்பாட்டுத் திறன்களை வளர்க்கவும் மைக்ரோசாஃப்ட் TEALS (Technology Education and Learning Support) திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முறை
இந்தியாவில் முதன்முறையாக TEALS திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் முன்னோடித் திட்டமாக 14 பள்ளிகளில் மட்டும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு அடுத்தகட்டமாக 100 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. அடுத்து அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறை சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்றும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் வண்ணம் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
சென்ற ஆண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுத் தருவது என முடிவானது.
கடந்த ஆண்டில் இருந்து 14 பள்ளிகளுக்கு பயிற்சி
மைக்ரோசாஃப்ட் Teals திட்டத்தை செயல்படுத்துவதற்கு, கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 அரசுப் பள்ளிகளுக்கும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 2 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 14 பள்ளிகளில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதில் பயனடைந்தவர்கள் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்ற 43 குழந்தைகள், அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது தன்னார்வத் தொண்டு நிறுவனமான நிர்மாண் குழு இந்தப் பயிற்சியை வழங்குகிறது.
இனி 100 பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த 100 பள்ளிகளில் பயிலும் கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, "நாட்டிலேயே முதன்முறையாக பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வருங்காலத்தில் இது தமிழ்நாட்டிலுள்ள 38,000 அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திட்டமான TEALS, தேசியக் கல்விக் கொள்கையின் அம்சம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது - அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!