(Source: ECI/ABP News/ABP Majha)
MBBS Counselling: தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு; மாநில அரசே நடத்தும்- தேதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதம் அதாவது 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், இன்னும் நிரப்பப்படாமல் 86 இடங்கள் உள்ளன. இதை வீணாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி
இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மத்திய அரசு 2023 செப்டம்பர் 30-ம் தேதிக்குள், நடப்பு கல்வியாண்டில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை (MBBS மற்றும் BDS) மருத்துவ சேர்க்கைக்காக, தமிழ்நாடு மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் (DGHS) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நான்கு சுற்று கவுன்சிலிங்கை முழுமையாக நிறைவு செய்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மாநில அரசால் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 16 இடங்கள் DGHSஇன் MCC இன் கவுன்சிலிங்கின் முடிவில் இன்னும் காலியாக உள்ளன. மேலும், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் (மேலாண்மை ஒதுக்கீடு) காலியாக உள்ளன.
ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த இடங்களை நிரப்ப முடியும்." என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் அனுமதி அளித்திருந்தார். இதையடுத்து இன்று முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது. காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதன்படி மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnmedicalselection.org/ என்ற இணைப்பை மாணவர்கள் க்ளிக் செய்து காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.