டாப்பர்ஸ் ஆவது எப்படி..? - பள்ளி மாணவர்களுக்கு டிப்ஸ் கொடுத்த மயிலாடுதுறை ஆட்சியர்
டாப்பர்ஸ் எல்லாம் ஒன்றும் இல்லை , திரும்பத் திரும்ப படிப்பது மற்றும் எழுதுவது இதுதான் சீக்ரெட் என பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அட்வைஸ் வழங்கினார்.
மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா மேல்நிலைப் பள்ளியில் ' எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ' என்ற தலைப்பில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் கலந்துகொண்டு பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியின் சுற்று சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பள்ளிகளில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் சிறப்பு செயல்படாக ஜனவரி மாதம் 9 -ம் தேதி முதல் 11ம் தேதி முடிய மூன்று நாட்கள் பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணி சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஒவ்வொருவரும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம். அதேபோல் நமது பள்ளியை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அனைத்து மாணவர்களும் உணர வேண்டும். நெகிழி பொருட்களை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார். அதைனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வருகிற அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது சார்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்கள்.
பின்னர் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக கேள்விகள் கேட்டு அவர்களின் கல்வித் திறனை ஆட்சியர் சோதனை செய்தார். பின்னர் கணிதம் ,வேதியியல் , இயற்பியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மார்ச் மாதம் பொதுத்தேர்வு வரவுள்ள நிலையில் பிப்ரவரி 20 -ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து கேள்வி கேட்பேன் என்றும், அப்போது மாணவர்கள் தவறாமல் படித்து இருக்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து மாணவர்கள் படிப்பது மற்றும் எழுதுவதை திரும்பத் திரும்ப செய்து பார்க்க வேண்டும் எனவும் , டாப்பர்ஸ் எல்லாம் ஒன்றும் இல்லை , அவர்களின் சீக்ரெட் என்பது இதுதான் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் தான் 21 வயதில் பணிக்கு வந்த போது அப்போது இருந்த கல்வி படிப்புகள் மிகவும் கடினம் என்றும் , வேலை பார்த்துக் கொண்டு தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என மற்றவர்கள் கூறினார்கள். ஆனால், தான் திரும்பத் திரும்ப படிப்பது மற்றும் எழுதுவது உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக பின்பற்றியதால் இந்திய அளவில் Rank வோல்டராக ஆகியதாக கூறினார். எனவே மாணவர்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு படிப்பது மற்றும் எழுதுவதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் புகையில்லா போகி குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும் அரையாண்டுத் தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசளித்து பாராட்டினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பார்த்தசாரதி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரபு, பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முருகானந்தம் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.