Madras University: ஊதியம் தரக்கூட பணமில்லை; ஓய்வூதிய நிதியை செலவழிக்கும் சென்னைப் பல்கலை: அரசு நிதிவழங்குக- அன்புமணி
ஊதியத்துக்குக்கூட பணமில்லை என்பதால் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதியை எடுத்து செலவழித்து வருவதாகவும் அரசு நிதிவழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஊதியத்துக்குக்கூட பணமில்லை என்பதால் சென்னைப் பல்கலைக்கழகம் ஓய்வூதிய நிதியை எடுத்து செலவழித்து வருவதாகவும் அரசு நிதிவழங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதி மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம், இப்போது ஊதியத்திற்குக் கூட நிதியின்றி தவிப்பதும், அதற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு மறுப்பதும் கவலையளிக்கிறது.
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும், ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் போன்ற கல்வியாளர்களால் கம்பீரமாக நிர்வகிக்கப்பட்டதுமான சென்னை பல்கலைக்கழகம் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மே மாத ஊதியத்திற்கும், பிற செலவுகளுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.18.61 கோடி தேவைப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்திடம் ரூ.5 கோடி மட்டுமே இருப்பில் இருந்தது. ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகளை செய்வதற்குக் கூட, குறைந்தபட்சம் ரூ.11.50 கோடி தேவைப்பட்டது. நிலைமையை சமாளிக்க ஒய்வூதிய நிதியம், அறக்கட்டளை நிதியம் ஆகியவற்றில் இருந்த ரூ.7.6 கோடியை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்து பயன்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
ரூ.500 கோடி வரை உபரி நிதி
சென்னை பல்கலைக்கழகத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு தமிழக அரசுதான் காரணமாகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியதுதான் நிதிநிலை அறிக்கை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்; இந்நிலையிலிருந்து பல்கலை. மீளவும் அரசுதான் உதவ வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் 779 பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊதியமும், 1463 ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.200 கோடி வரை பல்கலைக்கழகத்திற்கு செலவாகிறது. ஆனால், மாணவர்களுக்கு இலவசமாகவும், மிகக்குறைந்த கட்டணத்திலும் உயர்கல்வி வழங்கி வருவதால் பல்கலைக்கழகத்திற்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. அதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதிச்சுமையும், கடன்சுமையும் ஏற்படுகிறது.
ரூ.100 கோடியை தாண்டிய நிதிப்பற்றாக்குறை
எடுத்துக்காட்டாக 2022-23ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் மொத்த செலவு ரூ.164 கோடி ஆகும். ஆனால், பல்கலைக்கழகத்தின் மொத்த வருமானமே ரூ.92 கோடி தான். மாநில அரசு ரூ.63 கோடி மட்டுமே மானியம் வழங்கிய நிலையில், ரூ.8.50 கோடி பற்றாக்குறை ஏற்பட்டது. இப்படியாக கடந்த சில மாதங்களில் பல்கலைக்கழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.100 கோடியை தாண்டிவிட்டது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் சென்னை பல்கலைக்கழகம் வழங்குவதால், அதற்காக ஆகும் செலவை தமிழக அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ஊதிய செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுத்தால் 35% செலவை மட்டும்தான் அரசு ஏற்றுக்கொள்கிறது. அதனால், பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. நியாயமாக, உள்ளூர் தணிக்கை நிதியத்தால் பரிந்துரைக்கப்படும் தொகையைக்கூட அரசு வழங்குவதில்லை. 2021-22ஆம் ஆண்டில் இந்த வகையில் வழங்கப்பட வேண்டிய ரூ.11.46 கோடியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த வகையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.177 கோடிக்கும் அதிகமாகும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த ஐந்தாண்டுகளில் ஓய்வு பெற்ற எவருக்கும் பணிக்கொடை உள்ளிட்ட எந்த ஓய்வூதியப் பயன்களும் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கக்கோரி ஓய்வு பெற்றவர்கள் வாரத்திற்கு ஒரு போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. பல்கலைக்கழகத்தில் நிதி இல்லாததால் அவர்களின் கோரிக்கைகளை இன்று வரை நிறைவேற்ற முடியாத அவலம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலை
சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த நிலை என்று கூற முடியாது. தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழு மூலம் வழங்கப்படும் நிதியுதவி பெருமளவில் குறைந்து விட்ட நிலையில், தமிழக அரசுதான் அந்த சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் ஐ.ஐ.டிகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.500 கோடி வரை மத்திய அரசு வழங்குகிறது. நன்கொடைகள், காப்புரிமைகள் மூலம் ரூ.500 கோடி வரை கிடைக்கின்றன. ஆனால், சென்னை பல்கலைக்கழகத்திற்கும், தமிழகத்தின் பிற பல்கலைக் கழகங்களுக்கும் இதில் பத்தில் ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை. அதனால் தான் சென்னை பல்கலை. உள்ளிட்ட மாநில பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்ககழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.