JEE Mains Exam 2024: ஜேஇஇ மெயின் தேர்வு; தமிழ்நாட்டு மாணவர்களுக்காக விதிகளைத் தளர்த்திய என்டிஏ!
தேர்ச்சி பெற்ற ஆண்டு 2021 என்பதைத் தேர்வு செய்து, தேர்ச்சி பெற்ற மாநில வாரியம் தமிழ்நாடு என்று தேர்வு செய்தால், தேர்ச்சி முறை (Result Mode field) பக்கம் செயலிழப்பு செய்யப்படும்.
2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தேர்வுகளை நடத்தும் என்டிஏ, தமிழ்நாடு மாணவர்களுக்காக விதிகளைத் தளர்த்தி உள்ளது. இதன்படி, 2021ஆம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் பக்கம், செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. (disabled)
புரட்டிப் போட்ட கொரோனா
கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு சதவீத அடிப்படையில் மதிப்பெண்களைக் குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மதிப்பெண் சதவீதத்தைக் குறிப்பிடும் நிலையை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் தேசியத் தேர்வுகள் முகமையிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு மாணவர்களுக்காக என்டிஏ விதிகளைத் தளர்த்தி உள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு மாநில மாணவர்கள் சிலரிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதில், 2021ஆம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொரோனோ காரணமாகத் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதால், தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு
இதனால் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களால் மதிப்பெண் சதவீதத்தைக் குறிப்பிட முடியவில்லை. தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தேர்ச்சி பெற்ற ஆண்டு 2021 என்பதைத் தேர்வு செய்து, தேர்ச்சி பெற்ற மாநில வாரியம் தமிழ்நாடு என்று தேர்வு செய்தால், தேர்ச்சி முறை (Result Mode field) பக்கம் செயலிழப்பு செய்யப்படும்.
அதற்கேற்ற மதிப்பெண்கள், சிஜிபிஏ ஆகியவை மறைந்துவிடும். 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். முன்னதாகவே ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இதன் மூலம் எந்த ஒரு தேர்வரும் விண்ணப்பிக்கும்போது சிக்கலை எதிர்கொள்ள நேரிடாது. ஆனாலும் தேர்வர்களில் யாருக்காவது இடர் ஏற்பட்டால், அவர் 011 - 40759000 / 011 - 69227700 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். அல்லது jeemain@nta.ac.in என்ற இ- மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்’’ என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
ஜே.இ.இ. மெயின் தேர்வு
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ.2 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், மாணவர்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.