JEE Mains 2023 Session 2: ஜேஇஇ மெயின் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி? முழு விவரம்
2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். இதை மேற்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 12) கடைசித் தேதி ஆகும். இதை மேற்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய நிறுவனங்களில் உள்ள படிப்புகளில் சேர ஜே.இ.இ. என்னும் பெயரில் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இவை தவிர்த்த பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு (session 1) ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை (26ஆம் தேதி நீங்கலாக) நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 12) கடைசித் தேதி ஆகும்.
75 சதவீத மதிப்பெண்கள் அவசியமில்லை
முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது. இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது. ’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். JEE மெயின் தேர்வு ஏப்ரல் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையங்களின் விவரம், நுழைவுச் சீட்டு பதிவிறக்கம், தேர்வு முடிவுகள் வெளியீடு உள்ளிட்ட விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://examinationservices.nic.in/jeemain23/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBoa5vGFW0WEhHVzYmk1Pn1T என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு மையங்கள் குறித்து அறிய https://examinationservices.nic.in/JEEMain23/Registration/Instruction.aspx
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.