'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
சில மாணவர்கள் நகைச்சுவையான கருத்துகளைக் கூறி இருந்தனர். ஏன் சாம்பாரை விட்டு விட்டீர்கள்? அது நிச்சயம் காலை உணவு இட்லிக்கு ஏற்ற இணைதான் என்று பதிவிட்டு இருந்தனர்.
கேட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் தேர்வரின் பெயருக்கு பதிலாக இட்லி, சட்னி நோ சாம்பார் என்று ஐஐடி ரூர்க்கி தவறுதலாக மெயில் அனுப்பியது சர்ச்சையான நிலையில், நடந்த சம்பவத்துக்கு ஐஐடி மன்னிப்பு கோரியுள்ளது.
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேர்வு (GATE- Graduate Aptitude Test in Engineering) நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கேட் தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும். இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. இதன்படி 2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஹால் டிக்கெட்டில் அதிர்ச்சி
இந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி கேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்களுக்கு வந்த மெயிலில், "Dear IDLI CHUTNEY NO SAMBHAR" அதாவது, ''டியர் இட்லி சட்னி, நோ சாம்பார்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது இணையத்தில் வைரலாகி வந்தது. ரெட்டிட் தளத்திலும் சமூக வலைதளங்களிலும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட இட்லி, சட்னி, சாம்பார் வாசகம் அதிகம் பகிரப்பட்டது.
இதற்கு சில மாணவர்கள் நகைச்சுவையான கருத்துகளைக் கூறி இருந்தனர். ஏன் சாம்பாரை விட்டு விட்டீர்கள்? அது நிச்சயம் காலை உணவு இட்லிக்கு ஏற்ற இணைதான் என்று பதிவிட்டு இருந்தனர்.
’இனவெறி மெயில்’
எனினும் வேறு சில மாணவர்கள் ஐஐடி ரூர்க்கியைக் கடுமையாகக் குற்றம் சாட்டினர். இது ’இனவெறி மெயில்’ என்று கூறி இருந்தனர். குறிப்பாக ஒரு மாணவர், ஐஐடி ரூர்க்கியையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் எக்ஸ் பக்கத்தில் டேக் செய்து, ’’ஐஐடி ரூர்க்கி குழு என்னை இட்லி சட்னி, நோ சாம்பார் என்று கூறி இருக்கிறது. இதற்கு நான் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியவில்லை. ஆனால் இனவெறி கொண்டதாய் உணர்கிறேன்’’ என்று தெரிவித்து இருந்தார்.
ஐஐடி ரூர்க்கி விளக்கம்
இந்த நிலையில், "Dear IDLI CHUTNEY NO SAMBHAR" என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டு இருந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று ஐஐடி ரூர்க்கி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’2025ஆம் ஆண்டு கேட் தேர்வை நடத்தும் ஐஐடி ரூர்க்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில தேர்வர்களுக்கு தவறான மெயில் அனுப்பப்பட்டதை ஒப்புக் கொள்கிறது. மொத்தமாக மெயில் அனுப்பும்போது இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது.
இந்த பிரச்சினை உடனடியாகக் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டது. சரியான பெயர்களுடன் மீண்டும் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு இ- மெயில்கள் அனுப்பப்பட்டன. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்’’ என்று ஐஐடி ரூர்க்கி தெரிவித்துள்ளது.