TOEFl: ஆசிரியர்களுக்கு ஐஐடி சான்றிதழ் படிப்பு; மாணவர்களுக்கு டோஃபல் பயிற்சி: ஆந்திர முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடி சென்னை மூலம் சான்றிதழ் படிப்பு முடிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐஐடி சென்னை மூலம் சான்றிதழ் படிப்பு முடிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் மாணவர்களுக்கு டோஃபல் தேர்வுக்குத் தயாராக மின்னணு உள்ளடக்கம் மூலம் பயிற்சி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஆந்திர மாநிலமுதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தார். இதன்படி 2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும், 2021-22 கல்வியாண்டில் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கில கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் எதிர்ப்பை மீறி ஜெகன்மோகன் ரெட்டி திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மாநிலக் கல்வித் துறையுடன் ஆந்திர அரசு நேற்று (ஏப்ரல்10) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’பள்ளிகளில் பணியாற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களுக்கு ஐஐடி சென்னை மூலம் சான்றிதழ் படிப்புகள் அளிக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்களின் கற்றல் திறன்கள் அடுத்த 2 ஆண்டுகளில் உயர்த்தப்படும்.
டோஃபல் தேர்வுக்குத் தயாராகப் பயிற்சி
தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளில் மாணவர்களுக்கு டோஃபல் தேர்வுக்குத் தயாராகப் பயிற்சி வழங்கப்படும். இதற்கான மின்னணு உள்ளடக்கங்கள் விரைவில் தயார் செய்யப்படும். மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வாசித்தல், எழுதுதல், கவனித்தல் உள்ளிட்டவற்றில் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
வருகைப் பதிவேட்டை முறைப்படுத்த வேண்டும்
கற்றல் இடை நிற்றலைத் தடுக்க, அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சரியாக வருவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மதிய உணவுத் திட்டம் தரமான முறையில் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் - மாணவர் விகிதம் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்ய, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும்’’.
இவ்வாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுவரை ஆந்திர மாநிலத்தில் 1000 அரசுப் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல மீதமுள்ள பள்ளிகளுக்கும் விரைவில் மத்தியக் கல்வி வாரியத்தின் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.