Group 4: குரூப் 4 தேர்வு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? TNPSC தந்த முக்கிய அப்டேட் இதுதான்!
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்கள் பெற மற்றும் சரிபார்க்க எந்தெந்த அரசு அலுவலர்களை அணுக வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் அரசு பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலமாக குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் முதல் பல பொறுப்புகளுக்கு குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசு நடத்திய குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான பணியில் சேர்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்தெந்த அதிகாரியிடம் சரி பார்க்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் விவரங்களை கீழே விரிவாக காணலாம்.
பழங்குடியினர்:
பழங்குடியினருக்கு வருவாய் கோட்ட அலுவலர், உதவி ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் ( பொது/மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்) ஆகியோர் சான்றிதழ் சரிபார்த்து வழங்கத் தகுதியுடைய அலுவலர்கள் ஆவார்கள்.
ஆதிதிராவிடர்கள் / ஆதிதிராவிட அருந்ததியர்கள்:
ஆதிதிராவிட சமூகத்தினர் மற்றும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த அருந்ததியர்களுக்கு வட்டாட்சியர் சான்றிதழ் சரிபார்க்க தகுதியுள்ள அலுவலர் ஆவார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள்:
வட்டாட்சியர் நிலைக்கு குறையாத வருவாய்த்துறை அலுவலர் அல்லது தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அல்லது சாதிச்சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புத் துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் ( பள்ளி சான்றிதழ்கள்) அல்லது செயற்துணை வட்டாட்சியர் ( சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை) அல்லது கூடுதல் தலமையிடத்து துணை வட்டாட்சியர் அல்லது மண்டல துணை வட்டாட்சியர் இந்த பிரிவு சமூகத்தினருக்கு சான்றிதழ் சரிபார்த்து ஒப்புதல் வழங்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் ( ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்களவர், தொழுவ நாயக்கர் மற்றும் எர்ரகொல்லார் உட்பட) சமூகத்தினர்:
மண்டல துணை வட்டாட்சியர் அல்லது தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இந்த சமூகத்தினருக்கு சான்றிதழ்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள்.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.