Plus 2 Exams | ப்ளஸ்-2 தேர்வுகள் - தொடரும் குழப்பம்.. சர்வே நடத்த உத்தரவு!
நாளை பள்ளித் தலைமையாசிரியர்கள் அது தொடர்பான கருத்துக்கேட்பு முடிவுகளை பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமிருந்து பெற்று முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பச் சொல்லி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதன்படி நாளை பள்ளித்தலைமையாசிரியர்கள் அது தொடர்பான கருத்துக்கேட்பு முடிவுகளை பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமிருந்து பெற்று முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பச் சொல்லி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னர் இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் உடல்நலம் முக்கியம் ஆதலால் இந்த முடிவை சிபிஎஸ்சி எடுத்துள்ளதாகவும் கூறிய அவர், பிற மாநிலங்களின் கருத்துக்களும் முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும் கல்வியாளர்கள் கருத்து கேட்ட பின், இரண்டு தினங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அனைத்து மாணவர்களின் கருத்துக்களை இரண்டு நாட்களில் கேட்பது சாத்தியம் இல்லை என்றும்ஆசிரியர்கள், பெற்றோர்களின் கருத்தைக் கேட்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். tnschooledu21@gmail.com என்ற தளத்திலோ, 14417 என்ற எண்ணிலோ பெற்றோர் கருத்துகளை கூறலாம் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், மாநில கல்வித்திட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து குறித்து நேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்' எனப் பதிவிட்டிருந்தார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து என்பது சூழ்ச்சித் திட்டமே ஆகும். இந்தத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை. கொரோனா குறைந்த பிறகு மாநில அளவிலான பிளஸ் 2 தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்ற முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.
Also Read: ‘ப்ரா’ என உச்சரிக்கத் தயங்குபவரா நீங்கள்? : இது ப்ராக்களின் கதை! (பகுதி-1)