ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு செக்; வெளியான அதிரடி உத்தரவு
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல் ஒரே அலுவலகத்தில்/ பணியிடத்தில் பணிபுரியும் பட்சத்தில் அவர்களை மாறுதல் செய்திடவும் மற்றும் பொதுவான விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்திடவும் அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் அனைத்துவகை இயக்ககங்கள் / அலுவலகங்கள் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் பணி மாறுதல்
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் / ஆசிரியர் தேர்வு வாரியம் / இயக்ககங்கள் / பள்ளிகள் / இயக்ககங்களில் ஜூன் 30 நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் / உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர்- 1,2,3 விவரங்களை பணியிட வாரியாகத் தொகுக்க வேண்டும். அவற்றைத் தனித்தனியாக a3sec.tndse@gmail.com / cosea4sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 05.07.2024 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர் விவரங்கள் விடுபடாமல் முழுமையான வகையில் விவரம் அளிக்க வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
a3sec.tndse@gmailcom - நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்
cosea4sec@gmail.com - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர்-1, 2, 3
இதுகுறித்த அறிவுறுத்தலை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வழங்கியுள்ளார்.