தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த நிதி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான நிதி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''நாடு முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள், அறிவியல்பூர்வமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பிஎம்ஸ்ரீ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த நிதி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.
2023 மார்ச் மாதம் அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, 'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்கிறோம். பணத்தைத் தாருங்கள்' என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தார். ஆனால், தமிழக அரசு சில நிபந்தனைகளை தற்போது விதித்துள்ளது.
அறிவற்ற விவாதம்
காவல்துறையில் சேர்ந்தால் காக்கி சீருடை அணிய வேண்டும். கருப்பு- சிவப்பு ஆடைதான் அணிவேன் என்றால், அது என்ன பிடிவாதம்? அறிவற்ற விவாதம். ஆனால் ஆசிரியர்களுக்கு நிதி அளிக்க முடியவில்லை என்று இந்த அரசு திசை திருப்புகிறது. அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறீர்கள் என்று ஒப்புக் கொள்ளுங்கள். ஏற்கெனவே பள்ளி வகுப்பறைகள் மோசமாக இருக்கின்றன. கல்வித் தரம் கீழே சென்றுவிட்டது.
அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு பள்ளியில் ஒரு மாணவனுக்கு 2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இந்த அவலங்கள் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் குறைபாடு இருக்கிறது. இதை ஆளுநரே தெரிவித்திருக்கிறார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழியா, பொய்யின் மொழியா?
2004 முதல் 2014 வரை திமுக, ஆளும் மத்திய அரசான காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. அப்போதே இதே தேசிய கல்விக் கொள்கை 3வது மொழி இந்தி அல்லது சமஸ்கிருதம் இருந்தது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியா, பொய்யின் மொழியா? அன்பில் மகேஸ் பொய்யாமொழி குடும்பத்துக்கு மும்மொழி வேண்டும். தமிழ்நாட்டுக்கு மும்மொழி வேண்டாமா?
வியாபாரத்துக்கும், உங்களின் குழந்தைகள் படிப்பதற்கு இந்தி வேண்டும். தமிழ்நாட்டுக் குழந்தைகள் படிக்க இந்தி வேண்டாமா?
திமுக தலைவர்களின் குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து சமச்சீர் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இல்லையெனில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்துவோம்''.
இவ்வாறு எச்.ராஜா பேசி உள்ளார்.