கல்லூரிகளில் திருநருக்கு இலவச இடம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 131 இணைப்புக் கல்லூரிகளில், 3-ம் பாலினத்தவருக்கு இலவச சேர்க்கையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 131 இணைப்புக் கல்லூரிகளில், திருநருக்கு இலவச சேர்க்கையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் 2010-ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
அந்த வகையில் கடந்த 2021- 22ஆம் கல்வி ஆண்டில், 340 ஏழை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து, இலவசமாக இளங்கலைப் படிப்புகளைப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் 131 இணைப்புக் கல்லூரிகளிலும், 3-ம் பாலினத்தவருக்கு இலவச சேர்க்கையை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ’’சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இணைப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு மாற்றுப் பாலினத்தவருக்கு இடம் வழங்கத் திட்டமிட்டு வருகிறோம். இதன்மூலம் ஏராளமான மாற்றுப் பாலினத்தவர்களின் உயர் கல்வி உறுதி செய்யப்படும்.
முன்னதாகக் கடந்த ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் துறைகளில் அனைத்து முதுகலைப் படிப்புகளிலும் மாற்றுப் பாலினத்தவருக்கு இலவச இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் எந்த ஒரு மாற்றுப் பாலினத்தவரும் முதுகலைப் படிப்பில் இதுவரை சேரவில்லை.
இந்த நிலையில், மாற்றுப் பாலினத்தவர் உயர் கல்வியில் சேரும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் சென்னைப் பல்கலைக்கழகம் செயல்பட உள்ளது. அதற்காக அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து மாற்றுப் பாலினத்தவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய உள்ளோம்’’ என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்