Foreign tour: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா.. யாருக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்
அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னரே அறிவித்திருந்த நிலையில், யாருக்கெல்லாம் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னரே அறிவித்திருந்த நிலையில், யாருக்கெல்லாம் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய / மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்படுகளை ஊக்குவிக்க இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன. கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாத நிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும்.
மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு எற்ப அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப அறிவு மற்றும் கணிணி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பமான எந்திரவியலைக் கற்றுக்கொள்ள எந்திரவியல் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.
இணைய பாதுகாப்பு மற்றும் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் மாணவர்களால் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அப்பள்ளிகளின் சத்துணவில் பயன்படுத்தப்படும்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒவ்வொருமாதமும் பள்ளிக்கு அழைத்து மாணவர்களின் உடல்நலம், கற்றல் அடைவு, இணைச் செயல்பாடுகளான விளையாட்டு, வாசிப்புத்திறன், மன்றச் செயல்பாடுகளில் பங்கேற்பு உள்ளிட்டபள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் எடுத்துக் கூறப்படும். இதன்வாயிலாக அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்தம்பெற்றோரும் பயன் பெறுவர்.
கவிமணி விருது
இலக்கிய மன்றத்தின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வாயிலாக மாணவர்களை கதை, கட்டுரை, கவிதை மற்றும் பட்டிமன்றம் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடச் செய்யலாம். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் இலக்கிய முகாம் மற்றும் போட்டிகளில் பங்கேற்பர். இம்முகாமில் தமிழ்நாட்டிலுள்ள தலைசிறந்த எழுத்தாளர்கள் மாணவர்களைச் சந்தித்து உரையாடுவர். இலக்கிய மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சுமார் 15 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதலமைச்சரால் "கவிமணி விருது'' வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் நடைபெறும் வினாடி வினா மன்றத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேவையான பொது அறிவுப் புதிர்களை மாணவர்களே தயாரித்து வர உற்சாகப்படுத்தலாம்.
கல்விச் சுற்றுலா
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கும் ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு போன்ற சிறார் இதழ்களிலிருந்தும் நூலகப் பாடவேளைகளில் மாணவர் வீட்டிற்கே எடுத்துச்சென்று படிக்கும் நூல்களிலிருந்தும் பொது அறிவு சார்ந்த வினாக்களைக் கேட்க மாணவர்களை ஊக்கப்படுத்தலாம். பள்ளி அளவில் நடத்தப்படும் வினாடி வினா போட்டிகளில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைப்பெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
இணையப் பாதுகாப்பு சூறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இணையவழிக் குற்றங்களிலிருந்து மாணவர்களைத் தற்காத்துக் கொள்ளவும், பாதுகாப்பற்ற இணையதளங்களை அடையாளங்கண்டு அவற்றிலிருந்து விலகியிருக்கவும் தேவையான பயிற்சிகளை அளிக்க கணிணி நிரல் அவசியம். எதிர்கால தொழில்நுட்பங்களுள் ஒன்றான எந்திரவியல் மன்றங்களையும் கணினி அறிவியல் ஆசிரியர் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துவங்கலாம்.
கணினி நிரல் மன்றங்கள்
கணினி நிரல் மன்றங்கள் மற்றும் எந்திரவியல் மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு மாவட்ட அளவில் உரிய பயிற்சிகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு அளிக்கப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் கணினி நிரல் / எந்திரவியல் மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.
இளம் கண்டுபிடிப்பாளர் விருது
மாநில அளவில் நடைபெறும் பள்ளி புத்தாக்கத் திட்டப் போட்டிகளில் வெற்றி பெறும்மாணவர்களுக்கு இளம் கண்டுபிடிப்பாளர் விருது முதலமைச்சரால் வழங்கப்படும். இம்மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களில் சுமார் 10 பேர் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவருடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பறியது. இக்காட்சி ஊடகத்தை மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவது இம்முயற்சியின் நோக்கமாகும்.
திரையிடப்படவேண்டிய படங்கள் அடங்கிய குறுந்தகடுகள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். படம் திரையிடப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து சிறு உரையாற்ற வேண்டும். திரைப்படம் முடிந்த பிறகு எதேனும் 5 மாணவர்களை ஆசிரியர் கண்டறிந்து அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் 2-3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேசச்செய்ய வேண்டும். பின்னர், அனைத்து மாணவர்களையும் திரைப்படம் குறித்து இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தம் சொந்த நடையில் எழுதித்தரச் சொல்லவேண்டும்.
இது, படம் குறித்த விமர்சனமாகவேோ, பாத்திரம் குறித்த திறனாய்வாகவவோ, படக்கதைச் சுருக்கமாகவோ, படத்தில் தான் உணர்ந்தவற்றை விவரிப்பதாகவோ இருக்கலாம். அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் கம்பிப் பந்தல் வாயிலாகவோ, வேறு முறைகளிலோ ஆவணப்படுத்த வேண்டும். சிறந்த படைப்புகளை துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் இடம்பெறச் செய்ய அனுப்பி வைக்கவேண்டும்.
பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொரு முறை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 15 மாணவர்கள்
வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
நான்காவது வாரத்தில் இசை / வாய்ப்பாட்டு / நடனம் / பாரம்பரியக் கலை சார்ந்த செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மாணவர்களுடைய கலை ஆர்வத்தை ஊக்குவிப்பது, கற்பனைத் திறனை மேம்படுத்துவது, பாரம்பரியக் கலைகளை பள்ளியளவில் கொண்டு சேர்ப்பது ஆகியவை இச்செயல்பாடுகளின் நோக்கமாகும். பள்ளிகள் மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க இசை, வாய்ப்பாட்டு, நடனம், பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கிராமியப் பாடல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கலாம்.
அரசு இசைப்பள்ளி கல்லூரி, ஜவஹர் சிறுவர் மன்றம் போன்ற அரசு அமைப்புகளிடமிருந்தும் தனியார் கலைக் கல்வி நிறுவனங்களிடமிருந்தும், கலைஞர்களை அழைத்து வெவ்வேறு கலை வடிவங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கலாம்.
கலைத் திருவிழா நடத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கொருமுறை மாநில அளவில் நடைடுபறும் கலைத் திருவிழாவில் பங்கேற்பர். மாநில அளவில் இவ்வாறு வெற்றி பெறும் சுமார் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.