Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
மாணவர்களுக்கான Pre -Matric மற்றும் Post- Matric Scholarship உச்ச வரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 8 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கல்வி உதவித் தொகைக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆண்டுதோறும் தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான Post- Matric Scholarship உச்ச வரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 8 இலட்சம் ரூபாயாக உயர்த்துக
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 இலட்சம் என நிர்ணயித்துள்ள நிலையில், அதை உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (10-12-2024) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (Economically Weaker Section) வருமான உச்ச வரம்பை ஒன்றிய அரசு 8 இலட்சம் ரூபாயாக மாற்றி அமைத்துள்ளதையும், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம்
போன்றவற்றில் வருமான உச்சவரம்பு 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர் என்று குறிப்பட்டுள்ளார்.
குறைந்த உயர்கல்வி சேர்க்கை விகிதம்
அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey on Higher Education) தரவுகளின்படி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ration) மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானது என்றும் அவர் தனது கடிதத்தில் வலியறுத்தியுள்ளார்.
பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்
மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித் தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கினால், இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் தலையிட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதா பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக்கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பினை 2.50 இலட்சம் ரூபாயில் இருந்து, 8 இலட்சம் ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்னாயிக்க வேண்டுமென வலியறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.