Teachers Protest: டிட்டோஜாக் போராட்டம்: மீண்டும் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்! ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?
தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 12 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டம் என்று டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 12 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டம் என்று டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக நேற்று சென்னை, எழும்பூரில் டிட்டோஜாக் எனப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, போராட்டத்தில் ஈடுபட்டது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை செயலாளருடன் சந்திப்பு
இதுதொடர்பாக மாநில உயர்மட்டக்குழு கூறும்போது, ’’டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நேற்று 8.12.2025 சென்னையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக காவல்துறையின் ஏற்பாட்டில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருடன் தலைமைச் செயலகத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக விவாதித்தனர்.
அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளார் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஏற்கனவே கடந்த 12.8.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர். அது தொடர்பாக அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும் அவரிடம் வழங்கப்பட்டது .
நான்கு கோரிக்கைகள் ஏற்பு
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் பள்ளிகல்வித் துறை அமைச்சர் அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நான்கு கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய விவரங்களும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ‘’உங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக இன்றே உத்தரவுகள் வெளியிடுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றாலும், இந்த நிமிடம் முதல் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நான் விரைவுபடுத்துகிறேன். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோடு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறேன்’’ என்று தெரிவித்தார். அந்த அடிப்படையில் அவருடைய பேச்சு வார்த்தை நிறைவு பெற்றது
அதன்பின்பு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், நேற்று நடைபெற்ற ஒரு நாள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த போராட்டத்தை சென்னையில் தொடர்ந்து நடத்துவதை விட இந்த போராட்டத்தை ஒரு விரிவடைந்த போராட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .
டிசம்பர் 12 அன்று மறியல் போராட்டம்
அதன் அடிப்படையில் வருகிற 12/12/2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது என முடிவாற்றப்பட்டுள்ளது
இப்போராட்டத்தினை வெற்றி கரமாக நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான டிட்டோஜாக் கூட்டங்களை நாளை (10.12.2025 அன்று) நடத்த வேண்டும் என முடிவாற்றப்பட்டது
அதன்பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு மீண்டும் கூடி அறிவிக்கும்’’ என்று டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.






















