CUET UG Result: தவிக்கும் மாணவர்கள்; தாமதமாகும் க்யூட் தேர்வு முடிவுகள்- என்னதான் செய்கிறது என்டிஏ?
CUET UG 2024 Results: க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 30ஆம் தேதியே நெருங்க உள்ளது. இதனால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வுகள் மே 15, 16, 17, 18, 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
முதல்முறையாக கலப்பு முறையில் ( இரு முறைகளிலும்) அதாவது கணினி வழியிலும் பேனா- காகித முறையிலும் க்யூட் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக 15 பாடங்களுக்கு பேனா – காகித முறையிலும் 48 பாடங்களுக்கு கணினி முறையிலும் நடைபெற்றது. இந்த க்யூட் தேர்வு நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் நடைபெற்றது. 13.48 லட்சம் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
ரத்து செய்யப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட நுழைவுத் தேர்வுகள்
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் நீட், நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் காரணமாக யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிஎஸ்ஐஆர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. முதுகலை நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை தலைவர் சுபோத் குமார் நீக்கப்பட்டார்.
நீட் மறுதேர்வு நடத்தக் கோரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனால் க்யூட் தேர்வு முடிவுகளும் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
என்ன பிரச்சினை?
நாடு முழுவதும் பொறியியல், மருத்துவம் ஆகிய தொழில்முறைப் படிப்புகளைத் தவிர, பிற படிப்புகளுக்கெல்லாம் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகளே இன்னும் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியான பிறகே மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடியும்.
இதற்கிடையே உத்தேச விடைக் குறிப்புகள் ஜூலை 6ஆம் தேதி வெளியாகின. சில மாணவர்கள் சில விடைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்த நிலையில், ஜூலை 19ஆம் தேதி சுமார் 1000 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து திருத்தப்பட்ட உத்தேச விடைக் குறிப்புகள் ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்பட்டன.
க்யூட் தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 30ஆம் தேதியே நெருங்க உள்ளது. இதனால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
ஓரிரு நாளில் தேர்வு முடிவுகள்
இதுகுறித்து என்டிஏ தரப்பில் விசாரித்தபோது, இன்றோ நாளையோ க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தனர்.